ஜூரோங் புதுமை திட்டம்-கட்டுமானத் துறையில் புதிய அத்தியாயம்..!!
சிங்கப்பூர்:ஜூரோங் புதுமை மாவட்ட (JID) திட்டத்தின் கீழ், ஜூரோங் குழுமம் புதிய கூட்டு பொறியியல் ஒப்பந்தமான NEC4 (New Engineering Contract 4)-ஐ முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொதுப்பணி ஒப்பந்தத்தை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறை என்று குழு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், கிளீன்டெக் லூப்பை நீட்டித்து புதிய சுரங்கப்பாதை நிலையத்துடன் இணைக்கும் பணிகளையும், கிளீன்டெக் பூங்காவின் வடக்கு பகுதியில் உயர்ந்த பாதசாரி நடைபாதை ஒன்றை அமைக்கும் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக பட்ஜெட் மீறல்கள் மற்றும் திட்ட தாமதங்கள் போன்ற சவால்கள் நீடித்து வருவதாக குழு குறிப்பிட்டது. இதனை சமாளிக்க, திட்ட ஆபத்து மற்றும் ஊக்க வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் புதிய ஒப்பந்த மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதிரியின் மூலம் ஒப்பந்தக் கட்சிகள் செலவு சேமிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது நிலையான ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் செலவுகளை கூட்டாக ஏற்கலாம். இதனால் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, கட்டுமான திறன் ஆகியவை மேம்படும் என்றும், சர்ச்சைகளுக்கான வாய்ப்பு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முயற்சி பங்கேற்பாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த அனுபவத்தை வழங்கி, புதிய மாதிரிகளை உள்ளூரில் செயல்படுத்துவதற்கான திறனை வளர்த்தெடுக்கவும், தொழில் துறையை எதிர்கால மாற்றத்திற்குத் தயாராக்கவும் உதவும் என்று ஜூரோங் குழு தெரிவித்துள்ளது.