சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட Z தலைமுறை இளைஞர்கள், தங்கள் நிதி எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக புருடென்ஷியல் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 51% பேர் ஓய்வு பெற்ற பின் அன்றாடச் செலவுகளையும் சுகாதாரப் பராமரிப்பையும் சுலபாகமாக நடத்த முடியும் எனக் கருதுகிறார்கள்.
இது மில்லினியல்ஸ் (45%) மற்றும் ஜெனரேஷன் X (38%) விட அதிகம். இருப்பினும், 72% பேர் இன்னும் ஓய்வூதியத் திட்டம் தொடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமுறை பல வருமான ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியிலும், வேலை-வாழ்க்கை சமநிலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. சுமார் 32% பெயர் தொலைதூர வேலை வாய்ப்புகளால் வேலைக்கும் பயணத்திற்கும் இடையில் சமநிலை ஏற்படுத்த விரும்புகிறார்கள்,22% பேர் பல “சிறிய ஓய்வூதிய” சுழற்சிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆய்வில் 54% பேர் 60 வயதில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்க,20% பேர் 50 வயதிலேயே ஓய்வு பெற விரும்புகிறார்கள்.
இதற்கு மாறாக,55 வயதுக்கு மேற்பட்ட பேபி பூமர்கள்,முன்னதாக சேமிக்காததற்கு வருந்துவதாக கூறினர். 94% பேர், 40 வயதிற்குப் பதிலாக 28 வயதில் நிதித் திட்டமிடல் தொடங்கியிருக்க வேண்டும் எனக் கருதினர்.
அனைத்து தலைமுறையினருக்கும் பொதுவான கவலையாக இருப்பது அதிக வாழ்க்கைச் செலவு (75%), சுகாதாரச் செலவு (56%), மற்றும் வருமான வளர்ச்சி குறைவு (50%) போன்றவை ஆகும்.