ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்..!!!
சிங்கப்பூர்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் இன்று(22.02.26) மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா, பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பின்னர் கடப் புறப்பாடு தொடங்கியது. காலை 9 மணிக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வேத மந்திரங்கள் முழங்கும் சூழலில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் அர்ப்பணிக்கப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
குடும்பங்களுடன் வந்துள்ள பக்தர்கள், சிறப்பு தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிறைந்துள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.விவியின் பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
ஹாலந்து–புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு பக்தர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.இந்த ஆலயம் ஆரம்ப காலத்தில் உட்லண்ட்ஸ் ரோட்டில் அமைந்திருந்தது.
பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுங்காய் கடுட் வட்டாரத்தில் கோயில் கட்டப்பட்டது. அப்போதிலிருந்து சமூக மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக இது விளங்கி வருகிறது.அதன் பிறகு முதல் முறையாக கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.