பராமரிப்பு பணிகள் தீவிரம்...!! சாலை வழக்க நிலைக்கு திரும்புவது எப்போது..???
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலை சந்திப்பில் ஏற்பட்ட திடீர் சாலைச் சரிவு காரணமாக, மவுண்ட்பேட்டன் சாலைக்கும் கிழக்கு கடற்கரை பார்க்வேக்கும் இடையிலான சாலை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நிலைப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மரைன் பரேட்-பிராட்லி ஹைட்ஸ் GRC உறுப்பினர்கள் நிங் புய் மிங் மற்றும் வு பீமிங் ஆகியோர் இன்று (27.07.25) காலை நேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
அவர்கள், இடிந்த பகுதியில் நடைமுறை பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் கவனிக்க வந்ததாகவும், தற்போதைய கட்டத்தில் பொதுப் பயன்பாட்டு வாரியம் வடிகால் பணி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நிங் புய் மிங் மேலும், இப்பணிகள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கக்கூடும் என்றும், அதற்குப் பிறகு சிக்கிய வாகனங்களை பாதுகாப்பாக எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பதையும் சிவில் பாதுகாப்புப் படையினருடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
பொதுப் பயன்பாட்டு வாரியம் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், ஊழியர்கள் முழு உழைப்போடு பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக 36 மற்றும் 48 ஆகிய பேருந்து சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
மரைன் பரேட், ஆம்பர், மவுண்ட்பேட்டன் மற்றும் தஞ்சோங் கட்டோங் சாலை ஆகிய இடங்களில் தற்காலிகமாக பேருந்து நிறுத்தங்கள் இயங்காது. பயணிகள் தங்கள் பயணங்களை முன்னதாகவே திட்டமிட்டு, சாத்தியமான தாமதங்களை எதிர்பார்க்க வேண்டுமென நிலைப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது.