Vape பொருட்களைத் திருட $20,000 கொடுக்க முன்வந்த நபர்..! சிங்கப்பூரில் நடந்தது என்ன?

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட S$66 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மின்னணுப் புகையிலைப் பொருட்களை மீண்டும் திருட முயன்ற மலேசிய நபர் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
35 வயதான சுவா வீ மிங் (Chua Wee Ming) என்ற அந்த நபர், 2024ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து 6,53,868 மின்னணுப் புகையிலைச் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்துள்ளார். அவற்றின் கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் S$66.28 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கு ஒன்றில் அந்தப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 2024 மார்ச் 19ஆம் தேதி சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அங்கு சோதனை நடத்தி அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்தது.
பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவற்றை உடனடியாக வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால், அதே கிடங்கில் வைத்துப் பாதுகாக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் திருடுவதற்காக அந்த நபர் இருமுறை மற்றவர்களின் உதவியை நாடியுள்ளார். முதல் முயற்சிக்காக 50,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாகக் கூறிய அவர், இரண்டாவது முயற்சிக்காக S$20,000 வழங்க முன்வந்துள்ளார்.
ஆனால், இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன. கிடங்கில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
முதல் முயற்சியில் கைது செய்யப்பட்ட ஒருவரை, லாரியில் மறைத்து மலேசியாவுக்குக் கடத்திச் செல்லவும் சுவா ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் பின்னர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு, சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
சுவா வீ மிங், ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அவற்றில் திருடுவதற்காகக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றது, விற்பனைக்காகப் புகையிலைப் பொருட்களைப் போன்ற பொருட்களை வைத்திருந்தது மற்றும் நீதிச் செயல்முறைக்குத் தடையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் அடங்கும். மேலும் 12 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த வழக்கில் தண்டனை விவரம் 2026 டிசம்பரில் அறிவிக்கப்படவுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
