சிங்கப்பூர் MRT நிலையத்தில் ரகளை..!! போலீசாரை மிரட்டிய 51 வயது நபர் கைது!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் MRT நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 51 வயது நபர் ஒருவர், போலீசாரைத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) மாலை சுமார் 4:30 மணியளவில், சைனாடவுன் MRT நிலையத்தில் உதவி தேவைப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட அந்த நபர், MRT நிலைய ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற மறுத்துள்ளார். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உத்தரவுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியபோதும் அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த நபர் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாகவும், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையின்போது போலீசாரைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் எடுத்த காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதில், நான்கு போலீஸ் அதிகாரிகள் அந்த நபரைக் கட்டுப்படுத்தும் காட்சிகளும், பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய நிலைய ஊழியர்களும் காணப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த 51 வயது நபர் பொது இடத்தில் மதுபோதையில் இருந்ததாகவும், பொது ஊழியரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.