சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..!
சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக பாதுகாப்பு அச்சங்கள் உயர்ந்துள்ள சூழலில், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம் என குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் சிங்கப்பூருக்குள் வரும் பயணிகள் மட்டுமின்றி, சரக்குகள் மற்றும் பிற போக்குவரத்துகளிலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிலம், ஆகாயம், கடல் என அனைத்து நுழைவுப்பாதைகளிலும் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சோதனைச்சாவடிகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குடிநுழைவு நடவடிக்கைகளை முடிக்க பயணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்றாலும், நிலைமையைப் பொறுத்து அவை மாற்றமடையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் மத்திய கிழக்குக்கான சில பயணங்களை ரத்து செய்துள்ளன.மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள் காயமடைந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தேவையற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.அப்பகுதியில் இருப்பவர்கள் விழிப்புடன் இருந்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி,பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.