சிங்கப்பூரில் மொபிலிட்டி ஸ்கூட்டர் பயனாளர்களுக்கான புதிய விதிமுறை தளர்வு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மொபிலிட்டி எய்ட் வாகனங்களைப் (Mobility Aid Vehicles) பயன்படுத்துபவர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது, சட்டத் திருத்தங்கள் மற்றும் பயனர்களுக்கு சுமூகமான மாற்றத்துக்கான போதுமான நேரம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முதலில், இந்த விதி 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டிலேயே அமலுக்கு வரவிருந்தது. புதிய நடைமுறையின் கீழ், மொபிலிட்டி ஸ்கூட்டரைப் பயன்படுத்துவதற்கு முன் பயனர்கள் ஒரு மருத்துவரால் மதிப்பீடு செய்யப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும்.
சில பயனர்கள், தங்கள் உடல்நிலை காரணமாக இந்த விதிமுறையை வரவேற்கிறார்கள். “எனக்கு முதுகு அறுவைச் சிகிச்சை நடந்தது. நான் எளிதாக நடமாட முடியாததால், மருத்துவரிடம் சான்றிதழ் பெறுவது சிரமமில்லை,” என்று ஒருவர் கூறினார்.
மொபிலிட்டி ஸ்கூட்டர் விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உண்மையான மருத்துவத் தேவைகளுக்காகவே இவ்வாகனங்களை வாங்குகிறார்கள். ஆனால் விதிமுறைகள் தெளிவாக இல்லாததால், சுமார் 10% வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல் திட்டங்களை தாமதப்படுத்தி உள்ளதாக கூறினார்.
மேலும் அரசாங்க மானியம் அல்லது மருத்துவமனை வழியாக வாங்கப்படும் வாகனங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் வாங்கப்படும் ஆர்டர்கள் 50% வரை குறைந்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சகம் 2026 ஜனவரியில் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அமலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.