NTUC SG60 நடைப்பயணம் – தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) “NTUC SG60 டுகெதர் நடைப்பயணம்” என்ற சிறப்பு நிகழ்வை நடத்தியது. இந்த நடைப்பயணத்தின் மூலம், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட $3 மில்லியன் நிதி திரட்டப்பட்டது.
NTUC பராமரிப்பு உதவித் திட்டங்கள் வழியாக, தொழிற்சங்கத் தொழிலாளர்கள், தளத் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நல்வாழ்வை பெறவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என NTUC அறிவித்துள்ளது.
இந்நிகழ்வு NTUC இன் 64வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையும் குறிக்கிறது.“எந்த தொழிலாளியும் பின்தங்கக் கூடாது; ஒவ்வொருவரையும் மேம்படுத்தவும் பராமரிக்கவும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பாடுபடும்,” என NTUC பொதுச் செயலாளர் இங் சீ மெங் தனது உரையில் வலியுறுத்தினார்.
இன்று (06.09.25) நடைபெற்ற நடைப்பயணத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர். NTUC மையம், ஒன் மெரினா பவுல்வர்டிலிருந்து தொடங்கிய இந்த நிகழ்வில், பங்கேற்பாளர்கள் 3 கிலோமீட்டர் அல்லது 6 கிலோமீட்டர் நடைப்பயணத்தைத் தேர்ந்தெடுத்து நடந்தனர்.
மேலும், 200க்கும் மேற்பட்ட இளம் தன்னார்வலர்கள் நேரடியாக பயனாளிகளுடன் இணைந்து நடந்தனர். இதன் மூலம், குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது.
சிங்கப்பூர் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த NTUC SG60 நடைப்பயணம், சமூக ஒற்றுமை, பராமரிப்பு மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.