சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

சிங்கப்பூர்: வாகனம் ஓட்டும்போது வேன் ஓட்டுநர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தியதைக் கண்டு ஆத்திரமடைந்து, அவரை பின்தொடர்ந்து சென்று சாலையின் நடுவே தனது காரை திடீரென நிறுத்தி தகராறில் ஈடுபட்ட நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மேலும், அந்த நபர் 6 மாதங்களுக்கு எந்த வகையான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயதான ஜெரெமி குவெக் ஹான்ஃபெய் என்பவர் இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பிறரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டதாக அவர்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 2 குற்றச்சாட்டுகள் தண்டனை வழங்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் 2026 ஏப்ரல் 5ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் , அட்மிரல்டி ரோடு வெஸ்ட் மற்றும் உட்லண்ஸ் அவென்யூ 10 சந்திப்புப் பகுதியில் நடைபெற்றது.

அப்போது ஜெரெமி தனது காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனை முந்திச் சென்றபோது, வேன் ஓட்டுநரான டிரான் நட் சிங், வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே செல்போனைப் பயன்படுத்துவதை ஜெரெமி கவனித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், வேனை பின்தொடர்ந்து சென்றதுடன், பலமுறை ஹாரன் அடித்து, ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேனை முந்திச் சென்ற ஜெரெமி, பின்னர் மூன்று பாதைகள் கொண்ட சாலையின் நடுவே தனது காரை திடீரென நிறுத்தினார்.

அதன்பிறகு காரிலிருந்து இறங்கி வேனை நோக்கிச் சென்ற அவர், தொடர்ந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தனது செல்போனைப் பயன்படுத்தி டிரானைப் பதிவு செய்யத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது டிரான் அந்த செல்போனைப் பறித்துக்கொண்டார்.

இதையடுத்து ஜெரெமி வேனின் கதவைத் திறந்து, ஓட்டுநரை கன்னத்தில் அறைந்தார் . பின்னர் கதவை மூடிவிட்டு அங்கிருந்து விலகினார்.

ஜெரெமி தன்னைத் தாக்கியதைத் தொடர்ந்து வேன் ஓட்டுநர் டிரான் வாகனத்திலிருந்து இறங்கி ஜெரெமியைக் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே நேரடியாக கைகலப்பு ஏற்பட்டது.

அந்த வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டுநர் தலையிட்டு இருவரையும் பிரித்தார். சம்பவத்தின் ஒரு பகுதி ஜெராமின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவம் நடைபெற்ற அதே நாளில் ஜெரெமி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில், கைகலப்பின் காரணமாக அவரது பற்கள் உடைந்திருந்ததுடன், உடலில் சிராய்ப்புகளும் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் டிரானும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜெரெமி வெறுமனே ஹாரன் அடித்துவிட்டு சென்றுவிடவில்லை என்று அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.

அவர் வேன் ஓட்டுநரை பின்தொடர்ந்து, பின்னர் சாலையின் நடுவே காரை நிறுத்தி, வாகனத்திலிருந்து இறங்கி நேரடியாக ஓட்டுநரை எதிர்கொண்டதாக அரசு தரப்பு தெரிவித்தது.

அவரது செயலால் ஜெரெமி மற்றும் வேன் ஓட்டுநர் மட்டுமின்றி, அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த மற்ற பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது.

இதையடுத்து அவருக்கு 2 முதல் 4 வாரங்கள் வரை சிறைத் தண்டனையும், 6 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்க வேண்டும் என அரசு தரப்பு கோரியது.

ஜெரெமிக்கு வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்த அவர், இது தனது முதல் குற்றம் என்று கூறினார்.

மேலும், தனது தந்தை தற்போது முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறைத் தண்டனையை உடனடியாக அனுபவிப்பதற்குப் பதிலாக, வேலை மற்றும் குடும்ப விவகாரங்களைச் சரிசெய்ய 5 வாரங்கள் கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சிறைத் தண்டனையை பின்னர் தொடங்க அனுமதித்தார். அதே நேரத்தில், அவரது ஜாமீன் தொகையை S$10,000-லிருந்து S$15,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற அரசு தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பிற ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறுவதாகத் தெரிந்தாலும், அவரை பின்தொடர்ந்து சென்று சாலையிலேயே வாக்குவாதம் அல்லது கைகலப்பில் ஈடுபடுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, சாலையின் நடுவே திடீரென வாகனத்தை நிறுத்தி மற்றொரு ஓட்டுநரை எதிர்கொள்வது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி அருகில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

பிறரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட குற்றத்திற்கு அதிகபட்சமாக S$2,500 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் இறுதியாக ஜெரெமிக்கு 9 நாட்கள் சிறைத் தண்டனையும், 6 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தாமல் நேரடியாக மற்றொரு ஓட்டுநரை எதிர்கொள்வது, ஒரு சிறிய போக்குவரத்து பிரச்சினையை நீதிமன்ற வழக்காக மாற்றிவிடும் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.