சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங்,சீனப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்ட தனது வாழ்த்து செய்தியில், சிங்கப்பூர் குடும்பங்களே சமூகத்தின் அடித்தளம் என கூறினார்.
வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும்,குறிப்பாக இளம் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு விரிவான பராமரிப்பு உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான வரவுத்திட்டத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் அக்கம் பக்க வணிக வளாகங்களில் பயன்படுத்தக்கூடிய வவுச்சர்கள் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதல் உதவித் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும், பாலர் கல்வியை அதிக குழந்தைகள் அணுக வழிவகை செய்யவும்,பெற்றோரின் கல்விச்செலவு சுமையை குறைக்கவும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
முதியவர்களும் கண்ணியத்துடனும் சுயநிலையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்,புதிய திறன்களை கற்றுக்கொள்ள உதவுதல் மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூக நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மை குறித்து பேசும்போது, சந்திர புத்தாண்டும் ரமலான் மாதத் தொடக்கமும் ஒரே காலகட்டத்தில் வருவது சிங்கப்பூரின் பல்வேறு கலாச்சாரங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பிரதமர் கூறினார். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த நல்லிணக்கத்தை ஒவ்வொரு தலைமுறையும் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு “நெருப்புக் குதிரை ஆண்டு” மாற்றத்தையும் செயற்பாட்டையும் குறிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய மாற்றங்களுக்கிடையே சிங்கப்பூரர்கள் நெகிழ்வுத்தன்மையுடனும் உறுதியுடனும் ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வளமான மற்றும் அமைதியான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தும் தனது செய்தியை முடித்தார்.