வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூர் பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வந்த ‘அல்பட்ராஸ்’ ஆவணங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது தொடர்பான வரலாற்று புரிதலில் புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் திடீரென மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் 9, 1965 அன்று வெளியேற்றப்பட்டது. என்ற நீண்டகால நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் பிரிவினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், அப்போதைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹமான் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து சிங்கப்பூரை வெளியேற்றினார் என்ற பொதுவான கருத்துக்கும் மாற்றான தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய விவரங்கள், எதிர்காலத்தில் சிங்கப்பூர் வரலாறு பள்ளிகளில் கற்பிக்கப்படும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சகம், பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யும் போது பாடப்புத்தகங்கள் மற்றும் மின்னிலக்கத் தளங்கள் இத்தகைய புதிய வரலாற்றுத் தகவல்களுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தை மூலமே பிரிவினை நடந்தது என்ற தகவல் முற்றிலும் புதியதல்ல என்றும், இது 1998ஆம் ஆண்டு லீ குவான் யூ எழுதிய ‘தி சிங்கப்பூர் ஸ்டோரி’ நூலிலும் இடம்பெற்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் நினைவூட்டியுள்ளனர்.