சுங்க வரியை தவிர்க்க தம்பதியினர் செய்த தில்லாலங்கடி வேலை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குயின் ஸ்ட்ரீட் பகுதியில் தங்க நகைகள், கைப்பேசி மற்றும் பணம் இருந்த தங்களுடைய பை திருடப்பட்டதாக கூறி ஒரு வெளிநாட்டு தம்பதியினர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பின்னர் பொய்யானது என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆணும் அவரது மனைவியும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் இன்று (05.03.26) வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட தம்பதியினர் முறையே 30 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரிவித்தனர். புதன்கிழமை (04.03.26) அன்று ஆண் சந்தேக நபர், குயின் ஸ்ட்ரீட் பகுதியில் தனது கிராஸ்பாடி பை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
அந்த பையில் தங்க நகைகள், ஒரு கைப்பேசி மற்றும் S$400 ரொக்கம் இருந்ததாகவும், மொத்தம் S$21,668 மதிப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர்.
மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபரின் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், வெளிநாட்டு சுங்க வரிகளைத் தவிர்ப்பதற்காகவே அவர் பொய்யான புகாரை அளித்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், அவரது மனைவியும் இந்த பொய்யான புகாரை அறிந்திருந்ததுடன், தங்க நகைகளை ஒரு பாட்டிலுக்குள் மறைத்து தனது பைக்குள் வைத்திருக்க உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தம்பதியினர் ஆதாரங்களை மறைத்து நீதியைத் தடுக்க முயன்றதாக சந்தேகித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தம்பதியினர் மீது நீதியைத் தடுத்தது மற்றும் பொது அதிகாரிக்கு தவறான தகவல் வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் பொது அதிகாரிக்கு தவறான தகவல் வழங்கியதற்காக அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.