உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!!
அமெரிக்காவின் நியூயார்க்கில், கம்போடியாவின் பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத் தலைவர் டான் சீ மீது, உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நிதி மோசடி மற்றும் பணமோசடித் திட்டத்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர், 38 வயதான சென் ஷி (வின்சென்ட் என்றும் அழைக்கப்படுகிறார்) மீது தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தல், வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் வழியாக பணமோசடி செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள், இது “வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டு மோசடிகளில் ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளனர். “பன்றிக் கொலை மோசடி” எனப்படும் திட்டத்தின் மூலம் தினமும் சுமார் US$30 மில்லியன் (S$38.87 மில்லியன்) வரை லாபம் ஈட்டியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் புஜியனைச் சேர்ந்த சென் ஷி, கம்போடியா, வனுவாட்டு மற்றும் சைப்ரஸ் நாடுகளின் குடியுரிமைகளையும் பெற்றுள்ளார். மேலும், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் மற்றும் முன்னாள் பிரதமர் ஹுன் சென் ஆகியோருக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்ட தடைகள் பட்டியலில், டான் சீயின் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய மூன்று சிங்கப்பூர் குடிமக்களான சென் சியூலிங், டாங் நிகல் வான் பாவோ நபில் மற்றும் இயோ சின் ஹுவாட் ஆலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆலனுக்கு சீன பாஸ்போர்ட்டும் உள்ளது. மேலும், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட 17 நிறுவனங்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையின்படி, கம்போடியாவில் உள்ள தொழில்துறை பூங்காக்களில் கடத்தப்பட்ட தொழிலாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பூங்காக்கள் உயர்ந்த சுவர்கள் மற்றும் முள்வேலிகளால் சூழப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சென் ஷி அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அமெரிக்கா பறிமுதல் செய்த 127,271 பிட்காயின்கள் (தற்போதைய மதிப்பில் US$14 பில்லியன், S$18.1 பில்லியன்) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த வழக்கு கம்போடியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.