மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..?
சிங்கப்பூர்: மாணவர் பராமரிப்பு மையமான லிட்டில் ப்ரொஃபசர்ஸ் லேர்னிங் சென்டர் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊழியர்களின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) பங்களிப்புகளை நிறுவனம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த தவறு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர், விவகாரம் தீவிர கவனத்தை பெற்றது.
கடந்த வியாழக்கிழமை (19.02.26) நிலவரப்படி, மொத்தம் 49 ஊழியர்கள் நிறுவனம் தங்களுக்கான CPF பங்களிப்புகளை செலுத்தத் தவறியதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் அனைத்தும் CPF-க்கு நேரடியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்களின் எதிர்கால சேமிப்புத் தொகை பாதிக்கப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த CPF வாரியம், அக்டோபர் மாதத்திற்கு முந்தைய ஆறு மாதங்களில் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையும், மாதாந்திர CPF பங்களிப்புகளும் சீராக இருந்ததாக தெரிவித்தது. இதனால், திடீரென ஏற்பட்ட இந்த நிலுவை விவகாரம் குறித்த விசாரணை அவசியமானதாகியுள்ளது.
மேலும், 2026 ஜனவரியில் தாமதமான பணம் செலுத்துதல் தொடர்பாக நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு தற்போது தற்போது நீதித்துறை செயல்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையை சமாளிக்க தொடர்புடைய அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக CPF வாரியம் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் நலனும், சட்டத்தின் அமலாக்கமும் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் மாணவர் பராமரிப்பு துறையில் நம்பகத்தன்மை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.