அமெரிக்காவில் ஒரே நேரத்தில் புறப்பட முயன்ற இரு விமானங்கள்..!! கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் புறப்பட முயன்ற இரு விமானங்கள்..!! கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5:10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்களும் புறப்படுவதற்குத் தயாராக நகர்ந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

டல்லாஸ் நகருக்குச் செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 638, அருகில் இருந்த சிகாகோ நகருக்குச் செல்லவிருந்த விமானம் 2152-ன் இறக்கையுடன் உரசியுள்ளது.

இதில் ஒரு விமானத்தின் இறக்கையின் வெளிப்புற நுனிப்பகுதி சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலையடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, இரண்டு விமானங்களையும் பாதுகாப்பாக நிறுத்துமிடத்திற்குத் திருப்பி அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களைத் தங்களது இலக்குகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாற்று விமானங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சம்பவத்தின்போது விமானம் குலுங்கியதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது விமானத்தின் இறக்கைப் பகுதி சேதமடைந்திருப்பதைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தவுள்ளது. சேதமடைந்த இரண்டு விமானங்களும் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்பு முழுமையாகச் சோதிக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே 2025ஆம் ஆண்டு இதே ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே பயணிகள் விமானம் ஒன்றும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இரண்டு பயணிகள் விமானங்கள் உரசிக்கொண்ட சம்பவம் விமானப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.