சிங்கப்பூரில் வீடியோ மோகத்தால் கைதான 17 வயது இளைஞர்...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிழக்கு-மேற்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 17 வயது இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது இன்று (3 ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள சிமெய் நிலையம் மற்றும் தானா மேரா நிலையம் இடையே உள்ள சுரங்கப்பாதை தண்டவாளத்தில் சட்டவிரோதமாக ஒருவர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தார்.
மேலும் இது தொடர்பான சுமார் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரடப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி தகவல் கிடைத்தது.
விசாரணைக்குப் பிறகு, பிடோக் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளைஞரின் அடையாளத்தை உறுதிசெய்து நேற்று முன்தினம் (01.07.25) அவரைக் கைது செய்தனர்.
இதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது இன்று (03.07.25) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஒன்று விரைவான போக்குவரத்து அமைப்பு சட்டத்தின் கீழ் வேண்டுமென்றே ஆபத்தை விளைவித்தது, மற்றொன்று அத்துமீறி நுழைந்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, மனநல மதிப்பீட்டிற்காக அவரை மனநல நிறுவனத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இந்த மாதம் 17 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது 18 வயதுக்குட்பட்டவர் என்பதால், இளைஞர் சட்டத்தின் கீழ் அவரது பெயரை ஊடகங்கள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை.
மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
விரைவு போக்குவரத்து அமைப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அதிகபட்சமாக $10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அத்துமீறி நுழைந்ததற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால்,அதிகபட்ச தண்டனையாக 3 மாத சிறைத்தண்டனை,$1,500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.