செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு!
சிங்கப்பூர்: செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ONE° 15 மரினா கிளப் பகுதியில், பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு சொகுசுப் படகு அங்கிருந்த மிதவை மேடை மீது பலமாக மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தால் அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
படகு மோதிய வேகத்தில் மிதவை மேடை உடைந்து நகர்ந்ததால், அதன் அடியில் இருந்த முக்கிய விநியோகக் குழாய்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
விபத்தின் போது எரிபொருள் குழாய் உடைந்ததால் லேசான டீசல் கசிவு ஏற்பட்டது. எனினும், கடலில் மாசு ஏற்படுவதைக் தடுக்க அவசரக்கால துப்புரவுக் குழுவினர் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து மற்ற படகுகளுக்குச் செல்லும் மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ONE°15 மரினா கிளப் நிர்வாகம், துண்டிக்கப்பட்ட அனைத்து விநியோக சேவைகளையும் அடுத்த சில மணிநேரங்களிலேயே வெற்றிகரமாகச் சீரமைத்துள்ளனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று மரினா கிளப் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த மரினா செயல்பாடுகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் அது தடை இன்றி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடந்த போது படகில் இருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் செயல்பட்ட ஒரு காணொளி டிக் டாக் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகி பரவி வருகிறது.