காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றில், பச்சை இறைச்சி மற்றும் காய்கறிகள் வெளிப்புறத்தில் முறையாக மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஜூரோங் வெஸ்ட் பயனியர் மால் பகுதியில் உள்ள உணவங்காடியில், உணவுப் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை காகங்கள் கொத்தித் தின்ற காட்சியும் சமீபத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு குடியிருப்பாளர் அளித்த தகவலின்படி, ஜூலை 25ஆம் தேதியே இதேபோன்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை சுமார் 7 மணியளவில் உணவங்காடிக்குச் சென்றபோது, வெளியே தோஃபு, தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததை அவர் கவனித்துள்ளார்.
சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அங்கு இருந்தபோதும், உணவுப் பொருட்களை யாரும் எடுத்துச் செல்லவோ, பறவைகளை விரட்டவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, உணவங்காடி நிர்வாகத்திடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் நிலைமையைப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர், இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பிடமும் (SFA) புகார் அளிக்கப்பட்டது.
புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவங்காடியில் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிகாரிகள் ஆய்வு செய்த நேரத்தில் அந்த இடத்தில் பச்சை உணவுப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட உணவுக் கடை நடத்துநருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பச்சை உணவுப் பொருட்கள் எப்போதும் மூடிய கொள்கலன்களில் முறையாக வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஜூலை மாதத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி இதே உணவங்காடியின் வெளிப்புறத்தில் மீண்டும் காய்கறிகள் மற்றும் பச்சை இறைச்சி வைக்கப்பட்டிருந்ததாக மற்றொரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.
அப்போது, பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இறைச்சியை ஒரு காகம் கொத்தித் தின்ற காட்சியும் காணப்பட்டது.
இதனால், உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடையே கவலை எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உணவங்காடியை நிர்வகிக்கும் Koufu குழுமம் விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கடை நடத்துநரிடம் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டவுடன், அவற்றை முறையாகக் கையாள்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உணவங்காடி நிர்வாகக் குழு தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு அவை முறையாக சேமிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் கையாளப்படுவது முக்கியமானதாகும்.
குறிப்பாக, பச்சை இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் வெளிப்புறத்தில் பாதுகாப்பின்றி வைக்கப்படும்போது, அவை பறவைகள் அல்லது பிற காரணிகளால் மாசுபடும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த சம்பவத்தில் உணவுப் பொருட்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
