மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

சிங்கப்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டு பிணைத்தொகை கேட்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் ஒருவர், அரச மலேசிய காவல்துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 11)அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் இணைந்து நடத்திய மிக துரிதமான கூட்டு உளவு மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர், கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று தனியாக மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லாத நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று அவரது குடும்பத்தினருக்கு ஒரு மிரட்டல் தகவல் வந்துள்ளது.

அந்த முதியவர் மலேசியாவில் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவரை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்றால் பெருந்தொகையை பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

சிங்கப்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வு துறை (CID) உடனடியாக அரச மலேசியக் காவல்துறையினரிடம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து நடத்திய தீவிரப் புலனாய்வின் மூலம் கடத்தல்காரர்களின் இருப்பிடம் துல்லியமாக கண்டறியப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 7) அன்று மலேசியாவின் வடபகுதியில் உள்ள கெடா மாநிலத்தில் கடத்தல்காரர்கள் முதியவரை அடைத்து வைத்திருந்த இடத்தை மலேசியக் காவல்துறையினர் அதிரடியாக கண்டுபிடித்தனர்.


துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 72 வயது முதியவர் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சில சந்தேக நபர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபாயகரமான சூழ்நிலையில் இருந்த தங்களது குடிமகனைக் காப்பாற்ற மிகச் சிறந்த முறையில் அணுக்கமாகச் செயல்பட்டு உதவிய அரச மலேசியக் காவல்துறைக்கு சிங்கப்பூர் காவல்துறை தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.