சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது!
சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பாயா லெபார் சென்டர் அலுவலகக் கட்டிட வளாகத்தில் நபர் ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்து RM140,000 (மலேசிய ரிங்கிட்) ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில்அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாயா லெபார் சென்டரின் PLQ 3 அலுவலகக் கட்டிடப் பகுதியில் இந்தக் துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர், அங்கு ஒருவரை காலால் உதைத்துக் காயப்படுத்தி, அவர் வைத்திருந்த RM1,40,000 ரொக்கப் பணத்தை பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், சிங்கப்பூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தீவிர விசாரணையின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது காயத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்தல் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி, ஒருவரைத் தாக்கி கொள்ளையடிக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.