சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்,அண்மைய விழாக்காலத்தின் போது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், போக்குவரத்து விதிகளை மீறிய கிட்டத்தட்ட 60 வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவர்கள் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் பதிவாகியுள்ளன.
பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், இரு வெள்ளைக் கோடுகள் கொண்ட சாலையில் ஓட்டுதல் மற்றும் வரிசையை மீறி முந்திச்செல்லுதல் போன்ற செயல்கள் அதிகமாகக் கண்டறியப்பட்டன. தவறான திசையில் வாகனம் செலுத்திய சம்பவங்களும் பதிவாகின.
மொத்தம் 59 வாகனமோட்டிகள் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமீறல்கள், சோதனைச் சாவடி பகுதிகளில் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
குற்றம் புரிந்தவர்களில் 48 பேர் மீண்டும் வரிசையில் சேருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 31 பேர் மீது கூடுதல் விசாரணை மேற்கொள்ள போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
இதனுடன், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட குறைந்தது 11 வாகனங்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. வாகனமோட்டிகள் சாலையில் முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.