தகவல் பாதுகாப்பில் உலக தரத்தை நோக்கி சிங்கப்பூர்…!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு தொடர்பான நம்பகமான சூழலை உருவாக்க அரசாங்கம் மூன்று புதிய முயற்சிகளை இன்று(07.07.25) அறிமுகப்படுத்தியது.
இந்த ஆண்டு நடைபெற்ற தனிப்பட்ட தரவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில், டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சர் ஜோசபின் தியோ இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதன்மையான முயற்சியாக, குளோபல் AI அஷ்யூரன்ஸ் சாண்ட்பாக்ஸ் இன்று(07.07.25) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இது முன்னதாக சோதனைக்காக இயக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நிஜ உலகில் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்கும் இந்த திட்டம், புதிய வகையான செயற்கை நுண்ணறிவு மற்றும் அபாயங்களை உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை கட்டுப்பாட்டாளர்கள் AI நிர்வாகத் தரநிலைகளை உருவாக்கவும், அவற்றை சோதிக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்த முடியும்.
இரண்டாவது முயற்சியாக, தனியுரிமை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை (PET) மதிப்பீடு செய்து செயல்படுத்துவதற்காக, அரசாங்கம் புதிய வழிகாட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டியில், PET கருவிகள், அவற்றின் பயன்பாடு மற்றும் செயல்படுத்தலுக்கான சரிபார்ப்பு பட்டியல்களும் அடங்கியுள்ளன.
மூன்றாவது முன்னெடுப்பாக, அசல் தரவு பாதுகாப்பு மார்க்கை (Data Protection Trustmark – DPTM) மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சிங்கப்பூர் தரநிலைகளை மட்டுமல்லாமல், உலகளாவிய தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.தரவுகளை பொறுப்புடன் கையாளும் நிறுவனங்கள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.நுகர்வோர்,இந்த மார்க்கின் அடிப்படையில் தரவுப் பாதுகாப்பில் நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்களை அடையாளம் காண முடியும்.
சிங்கப்பூர், தகவல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான செயல்பாடுகளில் முன்னிலை வகிக்க, தனது முயற்சிகளை தொடர்ந்து விரிவுபடுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.