மதுரை முதல் டெல்லி வரை.. மீண்டும் தொடங்குகிறது நேரடி சேவை..!!
மதுரை:ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமானச் சேவைகளை தொடங்கவுள்ளது.
மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் புதன்கிழமை (29.10.25) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில், அதிக விமான போக்குவரத்து ஆனது, அதிகத் தெரிவுகள், மேம்பட்ட இணைப்பு, வலுவான போட்டி ஆகியவை பயணிகளுக்கும் வணிகத்திற்கும் பயனளிக்கும் என்று கூறினார். மேலும் விற்பனையாகும் ஒவ்வொரு விமானப் பயணச்சீட்டும் விமான நிலைய வளர்ச்சிக்கும் வட்டார வளர்ச்சிக்கும் உதவும் என்று கூறினார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் மதுரையிலிருந்து சேவை வழங்கவிருப்பதை மதுரை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் டாக்டர் ஜே. மகேந்திர வர்மன் வரவேற்றார்.
இண்டிகோ நிறுவனம் மட்டும் மதுரையிலிருந்து விமானங்களை இயக்கி வந்ததால்,தீபாவளி காலத்தில் விமானப் பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இனிமேல் அந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.