சிங்கப்பூரில் 255 பேர் மீது போலீஸ் விசாரணை.!!பின்னணியில் என்ன நடந்தது?
சிங்கப்பூர் காவல்துறை, மோசடி நடவடிக்கைகள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 255 ஆண்கள் மற்றும் பெண்களை விசாரித்து 2 வார கால நாடு தழுவிய நடவடிக்கையை மேற்கொண்டது.
அவர்கள் 660 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருப்பது அந்த நடவடிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $5.6 மில்லியனை இழந்துள்ளனர்.
நேற்று (ஜூலை 30) இது குறித்த காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வர்த்தக விவகாரத் துறை மற்றும் 7 காவல் பிரிவுகள் இணைந்து ஜூலை 16 முதல் 29ஆம் தேதி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
மோசடி மற்றும் பணக் கழுதைகளாக செயல்பட்டதாக சந்தேகப்படும் 122 ஆண்கள் மற்றும் 83 பெண்கள் இந்த நடவடிக்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் இளையவர் 16 வயதுடையவர் ; மற்றும் மூத்தவர்கள் 77 வயதுடையவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
இந்த நபர்கள் 660 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை நம்புகிறது. இதில் முக்கியமாக இணையவழி வர்த்தக மோசடி, பிஷிங் மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், முதலீட்டு மோசடிகள் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கல் மோசடிகள் ஆகியவை அடங்கும்.
அவர்கள் தற்போது மோசடி, பண மோசடி அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணையில் உள்ளனர்.
சிங்கப்பூர் சட்டத்தின்பட, மோசடி குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். பண மோசடிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குவதற்கு அதிகபட்சமாக $125,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
மோசடி குறித்த கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் ஸ்கேம்ஷீல்டு (Scam Sheild) இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது 1799 என்ற தளத்தின் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோசடி தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால், 1800-255-0000 என்ற காவல்துறை எண்ணையோ அல்லது காவல்துறை இணையதளம் மூலமாகவோ தங்களது தகவல்களை வழங்கலாம் எனவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.