வைரலான வீடியோவால் சிக்கிய பிரெஞ்சு மாணவர்.!! அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

வைரலான வீடியோவால் சிக்கிய பிரெஞ்சு மாணவர்.!! அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் உள்ள ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சி குழலை நக்கி விட்டு, அதை மீண்டும் இயந்திரத்திலேயே வைத்த பிரெஞ்சு இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் $600 அபராதம் விதித்துள்ளது.

19 வயதான பிரெஞ்சு மாணவர், திதியே காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் கடந்த மார்ச் 12ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் தாம்சன் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள ஐஜூஸ்( iJooz) என்னும் புதிய ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் இருந்து ஒரு உறிஞ்சி குழலை எடுத்து அதன் பாதிப் பகுதியை நக்கிவிட்டு, மீண்டும் பிறர் பயன்படுத்தும் டிஸ்பென்சரிலேயே வைத்துள்ளார்.

இந்த அநாகரிக செயலை தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து, Instagram பக்கத்தில்’ நகரம் பாதுகாப்பானது அல்ல'(city is not safe) என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் நண்பர் வட்டாரத்தில் இருந்து கசிந்து, உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் தன் மீதான பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் குற்றத்தை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்..

இன்று (ஜூலை 30) நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணையில், அவருக்கு நீதிமன்றம் $600 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

வீடியோ எடுத்த பிறகு, அந்த இளைஞரே அந்த உறிஞ்சி குழலை எடுத்து தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதால், பொதுமக்களுக்கு நேரடி உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இதனால் அவர் 3 மாதங்கள் வரை கிடைக்க கூடிய சிறை தண்டனையில் இருந்து தப்பி உள்ளார்.

இருப்பினும் இந்தத் தண்டனையைத் தொடர்ந்து அந்த இளைஞரின் மாணவர் விசா(Student Visa) ரத்து செய்யப்படுமா என்பதை சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.