ஈசூனில் பயங்கர தீ விபத்து..! பார்க்கிங்கில் கார் முழுவதும் எரிந்து நாசம்!

ஈசூனில் பயங்கர தீ விபத்து..! பார்க்கிங்கில் கார் முழுவதும் எரிந்து நாசம்!

சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் உள்ள ஆர்க்கிட் பார்க் அப்பார்ட்மெண்ட் வாகனம் நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், ஒருவர் புகை மூட்டத்தினால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நேற்று (ஜூலை 29) இரவு சுமார் 8:00 மணியளவில் ஈசூன் ஸ்ட்ரீட் 81 இல் அமைந்துள்ள ஆர்க்கிட் பார்க் அப்பார்ட்மெண்டின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு நபர் அவருக்கு எரியும் வாசனை வந்ததையெடுத்து, பின்னர் அவர் தனது பால்கனி வெளியே பார்த்ததாகவும், அங்கிருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும் இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) இச்சம்பவம் குறித்த இரவு 8:20 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இரண்டு நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்பார்ட்மெண்டின் ஒரு கோபுரப் பகுதியில் இருந்த குடியிருப்பாளர்களைத் தற்காலிகமாக அதிகாரிகள் வெளியேற்றினர்.


கடுமையான புகை மூட்டத்தை சுவாசித்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த விபத்தில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் கார் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்து சுவர்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின்படி, தீ பற்றிய வாகனம் மின்சார வாகனம் (EV) அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.