சிங்கப்பூரில் $4.9 மில்லியன் கொள்ளை..!! 6 பேருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் $4.9 மில்லியன் கொள்ளை..!! 6 பேருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூர் கிங் ஆல்பர்ட் பார்க் (King Albert Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் கொள்ளையடித்த வழக்கில் 6 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அதிகாலை சிங்கப்பூர் கிங் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் 7 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. கத்திகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் சென்ற அவர்கள், வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, சுமார் 4.9 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் கிரிப்டோகரன்சியை கொள்ளையடித்தனர்.

இந்த வழக்கில் 6 மலேசியர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் 8 மாதங்கள் முதல் 12 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேருக்கு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிங் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிக தொகை கொண்ட சீட்டாட்டம் நடைபெறுவதை Wong Chi Shan மற்றும் Goh Boon Tong ஆகிய இருவரும் அறிந்துகொண்டனர்.

அந்த வீட்டில் சீட்டாட்டம் நடைபெறும் நேரங்களில் கதவு திறந்திருந்ததை அவர்கள் கவனித்தனர். அங்கு பல லட்சம் டாலர் மதிப்பிலான பணம் மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் தெரிந்துகொண்டனர்.

இதையடுத்து, 2024ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டதால், தனியார் பாதுகாப்பு மற்றும் கடன் வசூல் தொழில் செய்து வந்த Mohd Hamidon Ahmed என்பவரை அணுகினர்.

கொள்ளையில் உதவுவதற்காக அவருக்கு 1.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் (சுமார் S$467,000) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2024 ஏப்ரல் 17ஆம் தேதி இரவு, கும்பலைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். பின்னர் இலக்கு வைக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்களைப் பார்த்து, அங்கு செல்வதற்கான திட்டத்தை வகுத்தனர்.

ஏப்ரல் 18ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர்கள் வீட்டை அடைந்தனர். கத்திகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்தவர்களை மிரட்டி, அவர்களின் வாயை டேப்பால் ஒட்டி, கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டனர்.

பின்னர் வீட்டில் இருந்த பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் கிரிப்டோகரன்சியை கொள்ளையடித்தனர்.

கும்பலைச் சேர்ந்த இருவர் அதிகாலை 2:15 மணியளவில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவுக்குத் தப்பிச் சென்றனர். மற்றவர்கள் சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக வெளியேறினர்.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 6 பேருக்கும் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Wong Chi Shan – க்கு 12 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறை, 24 பிரம்படிகள் மற்றும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Goh Boon Tong – க்கு 12 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறை, 24 பிரம்படிகள் மற்றும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Mohd Hamidon Ahmed -க்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை மற்றும் 24 பிரம்படிகள் விதிக்கப்பட்டது.

Kartik Palaniappan -க்கு 7 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை மற்றும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Muhammad Tauffiq Ahmad Fauzi என்பவருக்கு 7 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளது

Mohd Hashim Ismail -க்கு 8 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனையும், 51 வயது என்பதால் பிரம்படி தண்டனை விதிக்கப்படவில்லை.


கொள்ளையடிக்கப்பட்ட சுமார் S$4.9 மில்லியன் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களில், காவல்துறையினர் சுமார் S$1.69 மில்லியன் மதிப்பிலானவற்றை மட்டுமே மீட்டுள்ளனர்.

மீதமுள்ள சுமார் S$3.21 மில்லியன் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இதுவரை மீட்கப்படவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.