போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..!
சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஒரு லாரியுடன் தனது டிரக்கை மோத செய்துள்ளார். காவல்துறையினர் அவரது டிரக்கை சோதனை செய்ததில் அதில் மின்னணு சிகரெட் மற்றும் ஸோம்பி புகைக்கும் கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சாலை விபத்தானது ஜூலை 28ஆம் தேதி அன்று மாலையில் சுமார் 5:05 மணி அளவில் புக்கிட் படோக் கிழக்கு அவென்யூ 4 மற்றும் புக்கிட் படோக் கிழக்கு அவென்யூ 2 சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த புகைப்படங்கள் Telegram செய்தி பரிமாற்றத் தளத்தில் பயனர்களால் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வெள்ளை நிற வேனும் ஒரு சாம்பல் நிற லாரியும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வேனின் முன் பகுதி தெளிவாக சேதம் அடைந்திருந்தது ; மேலும் அந்த இடம் அலங்கோலமாக காணப்பட்டது.
லாரியின் மீது மோதியதில் டிரக் ஓட்டுநர் இருக்கையில் அந்த நபர் பலத்த சேதங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி அந்த நபரை பத்திரமாக மீட்டு உள்ளனர்.
சுயநினைவுடன் மீட்கப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்காக உடனடியாக தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூரில் வேப் பயன்படுத்துவது என்பது சட்டப்படி குற்றம் என்பதால், இது குறித்த கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு (HSA) மாற்றப்பட்டுள்ளது
தற்பொழுது இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.