மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.!
சிங்கப்பூரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த கொடூரக் கொலை வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட இந்தோனேஷியப் பணிப்பெண் சுமையாதிக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தவறு செய்தும் மன்னிப்பு வழங்கிய முதலாளியின் தந்தையையே அப்பெண் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் இருக்கும் 70 வயதுடைய லோ ஹூன் சியாங் என்ற முதியவரை தான் அப்பெண் கொலை செய்துள்ளார்.
ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு முதியவரின் குடும்பத்தினரின் நகைகளை பணிப்பெண் சுமையாதி திருடி அடகு வைத்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் திருட்டை கண்டுபிடித்த பிறகும் முதியவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது குடும்பத்தினர் அந்தப் பெண் குறித்த தகவல்களை போலீசில் புகார் அளிக்கவில்லை.
இந்த முறை போலீசில் மாட்டி விடுவோம் என்ற பயத்திலும், ஆத்திரத்திலும் முதியவர் படுக்கையில் தூங்கச் சென்ற போது, அவரது முகத்தில் தலையணையை வைத்து சுமார் 30 நிமிடங்கள் பலவந்தமாக அமுக்கி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு முதியவரின் பணப்பை மற்றும் மொபைல் போனை திருடி கொண்டு, அப்பெண் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.
சிங்கப்பூர் சட்டப்படி, கொலை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு இருந்தும், நீதிபதி சுமையாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்.
ஏனென்றால், இக்கொலை முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை; அந்த நேரத்தில் அவரது பயத்தால் நடந்துள்ளது. மனித உடலை மிகக் கொடூரமாக வதைக்கும் சித்திரவதை இதில் இல்லை என்பதால் மரண தண்டணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவில் இருந்த சில ஆன்லைன் காதல் மோசடியாளர்களிடம் சிக்கி சுமயாதி பெருமளவு பணத்தை இழந்ததாகவும், அந்த கடனை அடைக்கவே அவர் திருட்டில் ஈடுபட்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் சுமையாதி தான் செய்த குற்றத்திற்காக முதியவரின் குடும்பத்தாரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.