SLE-யில் கோர விபத்து..!! 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!
சிங்கப்பூரின் செலேட்டர் விரைவுச் சாலையில் (SLE) நேற்று (ஜூலை 29) காலை ஒரு கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (ஜூலை 29) காலை சுமார் 9:50 மணியளவில் இந்த விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
செலேட்டர் விரைவுச் சாலையில், சென்ட்ரல் விரைவுச் சாலை (CTE) மற்றும் டாம்பனீஸ் விரைவுச்சாலை (TPE) நோக்கிச் செல்லும் திசையில் உட்லண்ட்ஸ் அவன்யூ 12க்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு டிரெய்லர் லாரியும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், லாரி மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த SCDF மருத்துவ உதவியாளர்கள், அந்த 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தினர்.
விபத்தின் தீவிரத்தால் விரைவுச் சாலையின் இடது புறத்தில் உள்ள 2 தடங்கள் போக்குவரத்துத் தற்காலிகமாக மூடப்பட்டு கூம்புகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டன.
சமூக ஊடகப் பக்கங்களில் விபத்து குறித்த காணொளிகளானது பதிவிடப்பட்டுள்ளது. அதில் மோட்டார் சைக்கிள் விழுந்து கிடப்பதும், உயிரிழந்தவரின் உடல் நீல நிற காவல்துறை கூடாரத்தால் மூடப்பட்டிருப்பதும் தெரிகிறது.