ஆர்ச்சர்ட் சாலை கடைகளுக்கு குத்தகை ரத்து அதிர்ச்சி..!!
சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் ரோட்டில் ‘டேஸ்ட் ஆர்ச்சர்ட்’ பெயரில் இயங்கும் கட்டடத்தில் உள்ள பல சிறு வர்த்தகங்கள், குத்தகை காலம் முடிவதற்கு முன்பே வெளியேற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் ‘ஒஜி ஆர்ச்சர்ட் பாயின்ட்’ என அறியப்பட்ட இந்த கட்டடம் 2024 ஆம் ஆண்டு ‘டேஸ்ட் ஆர்ச்சர்ட்’ என பெயர்மாற்றம் கண்டது. கட்டடத்தின் பிரதான குத்தகையை ‘ஹவ் மார்ட் சூப்பர்மார்கெட்’ பெற்றது.அதன் மூலம் பல சிறு வணிகங்கள் உப வாடகையாளர்களாக இயங்கி வந்தன.
ஆனால் கட்டட உரிமையாளரான ஒஜி நிறுவனம், கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை வாடகை செலுத்தாதது மற்றும் அனுமதியின்றி உபகுத்தகை வழங்கியதாக ஹவ் மார்ட் மீது வழக்கு தொடர்ந்தது. இதனிடையே, இரு நிறுவனங்களுக்கிடையேயான குத்தகை ஒப்பந்தம் செப்டம்பர் 12 அன்று ரத்து செய்யப்பட்டது.
இதனால் டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் என சுமார் 30 சிறு வணிகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் இது 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், எதிர்கால நிலைமையைக் குறித்து அவர்கள் குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர்.
குத்தகை முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால், வணிக இழப்பு, கடை சீரமைப்பு மற்றும் இடமாற்றச் செலவுகள் போன்றவற்றிற்கான நஷ்டஈடு கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை. இதனால் சிகை அலங்காரம், துணைப்பாட நிலையம் போன்ற பல சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹவ் மார்டின் வழக்கறிஞர்கள் சமரசத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினாலும், நஷ்டஈடு பெறப்படும் என்ற உறுதி இல்லை என்பதே வணிகர்களின் முக்கிய அச்சமாக உள்ளது.