திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும் பூமியாக விளங்குகிறது. இந்த யாழ்ப்பாண நகரத்துக்குள் நம்மை வரவேற்கும் பகுதியாக நாவற்குழி என்ற இடம் இருக்கிறது. நீர் ஏரிகளும், பசுமைமாறாக் காடுகளுமாக காட்சி தரும் இந்த இடத்தில்தான், சிவபூமி என்ற பெயரிலான அறக்கட்டளையுடன் கூடிய ‘திருவாசக அரண்மனை’ நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெயருக்கேற்ப அரண்மனை போன்ற அமைப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் மூலவராக தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இலங்கையில் தட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட ஒரே ஆலயம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தின் ஐந்து அடுக்கு விமானத்தில், பல சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன. தட்சிணாமூர்த்தி சந்நிதியின் முன்னால் 21 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன தேர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் மீது லிங்க வடிவில் சிவபெருமானும், அவருக்கு அருகில் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
தேரின் முன்பாக, கருங்கல்லால் ஆன பெரிய நந்தி சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலய அரண்மனையின் இருமருங்கிலும், 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அதன் அருகில் உள்ள சுவர்களில், கருங்கல்லில் செதுக்கி பதிக்கப்பட்ட திருவாசகப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 108 சிவலிங்கங்களின் மேற்பகுதியிலும், சிவலிங்கத்துக்கு ஒன்றாக ஒரு மணி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
இங்கு வருகை தரும் அடியார்கள், இந்த மணியோசையை எழுப்பி, இறைவனுக்கு அபிஷேகம் செய்து தாங்களாகவே வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகரால் உருவாக்கப்பட்ட திருவாசகப் பாடல்களை, ‘சிவபுராணம்’ என்றும் அழைப்பார்கள். 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய இந்த நூலில் 658 பாடல்கள் இருக்கின்றன. இத்திருவாசகப் பாடல்கள் அனைத்தும், தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், சிங்களம், அரேபியம் உள்பட 11 மொழிகளில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.
அதோடு இங்கு திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையம், யாத்திரிகர்கள் தங்கும் அறை, அர்ச்சகர் அறை, கஞ்சியம சாலை, பாகசாலை போன்ற சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மண்ணுக்கு வருவோருக்கு ஒரு புதிய ஆன்மிக அனுபவத்தை வழங்குவதாக இந்த திருவாசக அரண்மனை அமைந்திருப்பது உண்மை.