ஆசியா பசுமை நிதிக்கு பெரும் ஆதரவு – MAS அறிவிப்பு...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாணய ஆணையத்தால் தொடங்கப்பட்ட ஆசியா உருமாற்ற கூட்டாண்மைக்கான நிதியுதவி (FAST-P) திட்டத்தின் கீழ் பசுமை முதலீட்டு கூட்டாண்மை நிதி அதன் முதல் சுற்று நிதி திரட்டலை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தமாக US$510 மில்லியன் நிதி உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் பசுமை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உலகளாவிய மற்றும் பிராந்திய பொது, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து உறுதியளிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படும் என்று MAS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு, மின்சார வாகன உள்கட்டமைப்பு, நிலையான போக்குவரத்து, நீர் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற முக்கிய துறைகளுக்கு பசுமை முதலீட்டு கூட்டாண்மை நிதியம் ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
HSBC மற்றும் Temasek இணைந்து நிறுவிய நிலையான உள்கட்டமைப்பு கடன் நிதி நிறுவனமான Pentagreen Capital, பசுமை முதலீட்டு கூட்டாண்மை நிதியத்தின் நிதி மேலாளராக உள்ளது.