விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான பதட்ட நிலை நடந்து வரும் சூழலிலும் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்து புதிய சாதனையை படைத்துள்ளன.
அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49).
இவர் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து எட்டு மாத காலம் விண்வெளி ஆய்வு பணிக்காக கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து ‘சோயுஸ் எம். எஸ்-29’ விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார்.
திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்த இந்த விண்கலம் புறப்பட்ட வெறும் 3 மணி நேரத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானியங்கி முறையில் மிக துல்லியமாக இணைந்துள்ளது. அமெரிக்காவில் பிறந்தாலும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அனில் மேனன், அமெரிக்க விண்வெளிப்படையின் கர்னலாவும் பணியாற்றியவர் ஆவார்.
இவருக்கு இதுவே முதல் விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவுதலை நேரில் பார்வையிடம் நாசா அமைப்பின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன் பைகோனூர் ஏவுதளத்திற்கு வருகை தந்தார்.
ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி பகானோவ் மற்றும் ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் ஆகியோரை சந்தித்த நாசா தலைவர் இந்த கூட்டு பணிக்காக உழைத்த விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
விண்வெளி நிலையம் சென்றடைந்துள்ள அணில் மேனன் குழுவினர் அடுத்த எட்டு மாதங்களுக்கு அங்கு தங்கியிருந்து மனித உடலியல் மாற்றங்கள் செயற்கை நுண்ணறிவு மருத்துவக் கருவிகள் மற்றும் செமி கண்டக்டர் தயாரிப்பு தொடர்பான பல்வேறு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.