சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..??

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..??

இந்தியாவில் சுமார் 1,50,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி, அதனை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் டீசல் உள்ளிட்டம் எரிபொருள் இன்றி நடுவழியில் நிற்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகள் இலவசமாக எரிபொருள் வழங்கி வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எரிபொருள் விலை சீரான இடைவெளியில் உயர்ந்து வரும் நிலையில் இந்த தகவல் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படுவது இல்லை.

அதே சமயத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ரோந்து மற்றும் அவசர உதவி குழுவினர் வாகன ஓட்டிகள் எரிபொருள் வாங்கவும் நடுவழியில் நிற்கும் வாகனங்களை இழுவை எந்திரம் மூலமாக பெட்ரோல் பங்குக்கு இழுத்துச் செல்வதற்கும் உதவுவார்கள்.

ஆனால் எரிபொருளுக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ தனிநபருக்கோ வாகன ஓட்டிகள் கொடுத்து விட வேண்டும். சுங்கச்சாவடிகள் எரிபொருள் இலவசமாக வழங்குவதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.