சிங்கப்பூர்- நார்வே இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் நார்வேக்கும் இடையிலான தடையற்ற வணிகத்துக்கான ஐரோப்பியச் சங்கம் – சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் (ESDEA) மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2025 செப்டம்பர் 25ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், ஐரோப்பியச் சங்கத்தின் இதர உறுப்புநாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மின்னிலக்கப் பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்துகிறது. குறிப்பாக நார்வே உடனான ஒத்துழைப்பை மேம்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது.
நிதிச் சேவைகள் உட்பட பல துறைகளில் எல்லை கடந்த தரவுப் பரிமாற்றத்துக்கான தெளிவான மற்றும் வலுவான விதிமுறைகள் இதில் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிறுவனங்களுக்கு சட்டரீதியான உறுதி கிடைப்பதுடன், மின்னிலக்க வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையும் அதிகரிக்கிறது.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பான மற்றும் நம்பகமான மின்னிலக்க வர்த்தக சூழலைப் பேணுவதில் இருதரப்பும் கொண்டுள்ள வலுவான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் இருதரப்பு நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மின்னிலக்கப் புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்திற்கான முன்னணி மையமாக சிங்கப்பூரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தங்களுடன் சேர்ந்து, இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய நாடுகளுடனான சிங்கப்பூரின் மின்னிலக்க ஒத்துழைப்பு வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. தடையற்ற வர்த்தகத்துக்கான ஐரோப்பியச் சங்கத்தின் இதர உறுப்பு நாடுகளுடனும் இந்த ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.