சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!
சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள்.
இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர்.
ஜின்னியின் பாதிப்பு குறித்து பெற்றோர் கூறியது: குழந்தையால் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் உட்கார முடியாது எனவும், தலையைக் கூட உயர்த்த முடியாது எனவும் கூறினர்.
மேலும் குழந்தை இருமுவதில் சிரமப்படுவதாகவும், அதனால் மார்பில் சளி தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தன் மகள் பால் குடிப்பதற்கு கூட கஷ்டப்படுகிறாள் என்று குழந்தையின் தாயார் மிகக் கவலையாக கூறியுள்ளார்.
ஜின்னி கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவளது நரம்பணுவானது செயல் இழக்கப் படுவதாகவும், அதை திரும்ப உருவாக்க முடியாது என்றும் கவலைப்படுகின்றனர்.
இந்த அரிய வகை நோய்க்கு ஒரு மரபணு சிகிச்சை உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டதால் அவர்களால் உட்கார, தவழ, நடக்க மற்றும் சுவாசிக்கவும் முடிந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மரபணு சிகிச்சைக்கு சுமார் $24 லட்சம் தேவைப்படுகிறது. இந்த மருத்துவ செலவுக்கு அரசு மானியங்கள் மற்றும் உள்ளூர் காப்பீட்டு திட்டங்களில் வரும் தொகையானது போதாது என்ற காரணத்தினால், அவளது பெற்றோர் இணையத்தில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பல புதிய பெற்றோர்களைப் போலவே தாங்களும் ஜின்னியை வளர்க்க ஆவலாக இருப்பதாகவும் , அதற்கு ஒரு வாய்ப்பை வழங்கவும் உதவி செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“நம்பிக்கையின் ஒளி” என்ற இணையதளமானது, இதுவரை $4,32,228 திரட்டப்பட்டதாக தகவல் அளித்துள்ளது. இந்த தொகையானது மருத்துவ செலவிற்கு தேவைப்படும் தொகையில் 17% ஆகும்.