தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
தாய்லாந்து: தாய்லாந்தில் உடனடியாக அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின் படி, தடைசெய்யப்பட்ட நேரங்களில் மது வாங்கும் அல்லது குடிக்கும் குடிமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் 10,000 பாட் (S$405) வரை அபராதம் விதிக்கப்படும்.
தாய்லாந்து அதிகாரிகள் மதுபான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர். இதனால் விற்பனையாளர்கள் மட்டுமல்ல, நுகர்வோரும் சட்ட ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
1972 முதல், பெரும்பாலான கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, நள்ளிரவு முதல் காலை 11 மணி வரை மது விற்பனைக்கு தடை உள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட அந்த நேரங்களில் மது வாங்குவது அல்லது அருந்துவதும் குற்றமாகக் கருதப்படும்.
உரிமம் பெற்ற ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தாய் உணவக உரிமையாளர்கள் இந்த புதிய விதி தங்கள் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
சுற்றுலா நிறுவனங்கள், உரிமம் பெற்ற இடங்களில் மது பரிமாற அனுமதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதாக பாதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளன. இருப்பினும், தடைசெய்யப்பட்ட நேரங்களில் வசதிக் கடைகள் அல்லது உரிமம் இல்லாத இடங்களில் இருந்து மது வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.