கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!!

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..??LTA விளக்கம்..!!

மலேசிய ஆன்லைன் ரைடு-ஹெய்லிங் தளமான கும்முடே, மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒரு எல்லை தாண்டிய டாக்ஸி சேவையை இம்மாதம் தொடங்கியது. இந்த டாக்ஸி சேவையை கும்முடே இரு இடங்களிலும் உள்ள டாக்ஸி ஆபரேட்டர்களுடன் இணைந்து வழங்கப்படும் சட்டப்பூர்வ சேவை என்று கூறியது.

இந்த சேவையில் பயணிகள் மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எங்கிருந்தும் டாக்ஸிகளைப் பெறலாம்.ஆனால் இறக்கிவிடப்படும் இடங்கள் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பஸ் டெர்மினல் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி டெர்மினல் ஆகும்.

கும்முடே ரைடு-ஹெய்லிங் தளத்தின் செயல்பாட்டு மாதிரியை தெளிவுபடுத்த மலேசிய நில பொது போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும்,எல்லை தாண்டிய சேவைகளை எந்த ரைடு-ஹெய்லிங் தளமும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்று சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற டாக்ஸிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் வழியாக எல்லை தாண்டிய சேவைகளை வழங்க முடியும்.மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் கண்காணிக்கக்கூடிய சேவையை வழங்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

எல்லை தாண்டிய சேவைகள் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் பரஸ்பர ஏற்பாடாகும் என்பதால், எந்த திட்டமும் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு, அதிகாரசபை கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று LTA தெரிவித்துள்ளது.