தென் கொரியாவில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..!! 38 பேர் காயம்!
தென் கொரியாவின் டேகு (Daegu) நகரில் உள்ள வணிகக் கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 38 பேர் லேசான காயமடைந்தனர்.
நேற்று(அக்டோபர் 10) காலை சுமார் 10:16 மணியளவில், நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அங்கு முதியவர்களுக்கான சமையலறைப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து, கட்டடத்திற்குள் இருந்த 66 பேர் தாங்களாகவே வெளியேறினர். அவர்களில் 38 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்களில் 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதுடன், சம்பவத்தை உரிய முறையில் கையாளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.