மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..??
மலேசியா:விவாகரத்திற்குப் பிறகு தனது இரண்டு இளம் குழந்தைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில், டெரெங்கானுவைச் சேர்ந்த 26 வயதான நூருல் ஐன் நதியா துணிச்சலான ஒரு முடிவு எடுத்தார்.
பெண்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் பேருந்து ஓட்டுநர் தொழிலையே அவர் தேர்ந்தெடுத்தார்.எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையான நதியா, உயர்நிலைப் பள்ளி முடித்ததும் மளிகைக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 20 வயதில் முதல் குழந்தையைப் பெற்றார். ஆனால் 2022 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அவரது திருமணம் முடிவுக்கு வந்தது.
வாழ்க்கைச் சவால்களை சமாளிக்க,இரவில் பாதுகாவலராகவும் பகலில் சகோதரர்களுடன் லாரி உதவியாளராகவும் பணியாற்றினார். அப்போது கனரக வாகனங்களின் மீது அவருக்கு அதிக ஆர்வம் உருவானது. தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்த நதியா, கனரக வணிக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, பொது சேவை வாகன பேருந்து உரிமப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்.2023 மார்ச் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக பேருந்து ஓட்டத் தொடங்கினார்.
நெகிழ்வான வேலை நேரமும் நிலையான வருமானமும் கிடைப்பதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீண்ட தூர பேருந்து நிறுவனத்தில் இணைந்தார்.இந்த வேலையின் மூலம் என் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் தன்னால் தொடர்ந்து ஆதரவளிக்க முடிகிறது என்று கூறினார்.
மேலும், வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் ஒற்றைத் தாய்மார்களுக்கு அவர் ஊக்கமளித்தார். அவர் “எளிதில் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் எதிர்காலத்தை மாற்றத் துணிந்து போராடுங்கள்,” என்றார்.