திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்!
முருகப்பெருமான் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பால்குடம் சுமந்தும், அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த ஒரு புராண நிகழ்வை பற்றி இங்கு பார்ப்போம்.
பராசர முனிவருக்கு துப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என ஆறு மகன்கள் இருந்தனர். அந்த ஆறு குழந்தைகளும் மிகவும் கட்டித்தனம் கொண்டவர்கள். ஒரு நாள் குளத்தில் குளிக்கும்போது, அந்த ஆறு குழந்தைகளும் நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் நீரில் இருந்த மீன்கள், தவளைகள் போன்றவை மிகவும் வேதனை அடைந்தன.
இதைக் கண்ட பராசர முனிவர், இந்த குளத்து நீரானது கங்கை நீருக்கு சமமாகும். மக்களின் பாவங்களை போக்கும் சக்தி கொண்ட இந்த புனித நீரை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய பாவம். எனவே குளத்தை அசுத்தப்படுத்தாதீர்கள், நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று பிள்ளைகளிடம் கூறினார்.
ஆனால் தந்தை பேச்சை கேட்காமல் ஆறு குழந்தைகளும் தொடர்ந்து குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.இதனால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்ததும் கோபம் கொண்ட பராசர முனிவர், ஆறு குழந்தைகளும் மீனாக மாறும்படி சாபமிட்டார். அடுத்த கணமே ஆறு பேரும் மீனாக மாறினர்.
இதனால் வருத்தம் அடைந்த ஆறு குழந்தைகளும் தங்கள் தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டனர். தங்களுக்கு சாபத்தில் இருந்து விடுதலை அளிக்கும்படியும் கெஞ்சினர்.
இதையடுத்து இரக்கம் கொண்ட பராசர முனிவர், நீங்கள் தொடர்ந்து இக்குளத்திலேயே வாழ்ந்து வாருங்கள். பார்வதி தேவியின் அருளால் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும்”என்றார். பின்னர் நெடுங்காலமாக அந்த ஆறு குழந்தைகளும் மீன்களாக வாழ்ந்து வந்தனர்.
ஒரு சமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப் பெருமானுக்கு ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஞானப் பாலை ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர குழந்தைகள் மீனாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை குளத்தில் இருந்த அந்த ஆறு மீன்களும் பருகியதால், அந்த ஆறு பேரும் முனிவர்களாக மாறினர்.
இதையடுத்து, ஆறு பேரும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிவபெருமானை வழிபட்டனர். அப்போது, நீங்கள் திருச்செந்தூர் சென்று, உரிய முறையில் வழிபாடுகள் செய்து தவம் செய்யுங்கள். உங்களுக்கு முருகப்பெருமான் அருள் புரிவார்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி, ஆறு முனிவர்களும் திருச்செந்தூர் சென்று தவம் இயற்றினர்.
அவர்களது தவத்தை கண்டு மகிழ்ந்த முருகப்பெருமான், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும், திருச்செந்தூரில் அமர்ந்து பக்தர்களுக்கு உதவும்படியும் அருளாசி வழங்கினார். அதன்படி, ஆறு முனிவர்களும் திருச்செந்தூரில் சேவை செய்து வருகிறார்கள்.
இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் 10-வது நாளான வைகாசி விசாக தினத்தன்று, பராசர முனிவர் மகன்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த புராண நிகழ்வை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். இந்நிகழ்வை கண்டு களிப்பவர்களுக்கு வாழ்வில் ஏற்பட்ட முன் வினை பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.