ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!!

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய "ஸ்மார்ட் வசதி"..!!

கூகுள் தனது கூகுள் டிரைவ் செயலியில் ஏ.ஐ. (AI) ஆதரவுடன் இயங்கும் புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள், விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகளை மொபைலிலேயே எளிதாக டிஜிட்டல் வடிவமாக மாற்றும் வகையில் இந்த மேம்படுத்துதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ‘ஸ்மார்ட் பேட்ச் ஸ்கேனிங்’ வசதி மூலம் பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே பி.டி.எஃப்.

(PDF) கோப்பாக இணைக்க முடியும். ‘ஆட்டோ பெஸ்ட் பிரேம்’ தொழில்நுட்பம் மங்கலாக அல்லது தெளிவற்ற வகையில் பதிவான பக்கங்களை கண்டறிந்து, அதற்குப் பதிலாக சிறந்த தரம் கொண்ட படத்தை தானாகத் தேர்வு செய்கிறது.

மேலும், தவறுதலாக ஒரே பக்கம் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டால் அதை ‘டூப்ளிகேட் டிடெக்ஷன்’ வசதி கண்டறிந்து நீக்குகிறது. இதனால் தேவையற்ற நகல் பக்கங்கள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த அனைத்து ஏ.ஐ. செயல்பாடுகளும் இணைய இணைப்பு இல்லாமலேயே நேரடியாக சாதனத்திலேயே இயங்குகின்றன. இதனால் தனிப்பட்ட ஆவணங்கள் கிளவுட் நினைவகங்களுக்கு அனுப்பப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

புதிய மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் வடிவமைப்புடன், ஆவணங்களை நிர்வகிப்பதற்கான இடைமுகமும் (Interface) மேலும் அழகாகவும், எளிமையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது குறைந்தது 8 ஜி.பி. (8 GB RAM) ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இந்த வசதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அடிக்கடி ஆவணங்களை ஸ்கேன் செய்பவர்களுக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தும் பயனுள்ள மேம்படுத்தலாக இருக்கும்.