ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கு காவல்துறை விடுத்த அதிரடி உத்தரவு.!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் காவல்துறை, ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அரசு நிறுவனங்களின் பெயரில் நடக்கும் தொலைபேசி எண் ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் அமல்படுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அனுப்பும் SMS செய்திகள் “gov.sg” முகவரியில் இருந்து மட்டுமே வர வேண்டும் என்பதைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும், இந்த விதிமுறை தற்போது ஆப்பிளின் iMessage மற்றும் கூகிள் மெசேஜஸ் தளங்களுக்கு பொருந்தவில்லை. இதனால் குற்றவாளிகள் இந்த தளங்களைத் தவறாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் பெயரில் போலி தகவல்களை அனுப்பி மோசடி செய்து வருகின்றனர்.
அண்மையில் சிங்போஸ்ட் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அனுப்பப்பட்ட 120க்கும் மேற்பட்ட மோசடி குறுஞ்செய்தி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், குற்றவாளிகள் “gov.sg” போன்ற அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க ஆப்பிள் மற்றும் கூகிள் இரண்டும் தொழில்நுட்ப ரீதியான தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளின் பெயர் பதிலாக அவர்களின் தொலைபேசி எண்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் பொதுமக்களிடம், தங்கள் மொபைல் போன்களில் iMessage மற்றும் Google Messages செயலிகளை தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.