தடைகளை தாண்டி எவரெஸ்டை வென்ற முதல் ஆப்கன் பெண்!புதிய வரலாறு படைப்பு!

தடைகளை தாண்டி எவரெஸ்டை வென்ற முதல் ஆப்கன் பெண்!புதிய வரலாறு படைப்பு!

மலையேற்ற வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் 30 வயதான ஜகியா, கடந்த மாதம் 21-ந் தேதி, எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து வரலாறு படைத்தார்.

தற்போது ரிவர் அகமது என்று அழைக்கப்படும் ஜகியா அகமது, ‘உலகின் கூரை போல் தோன்றிய இந்த சிகரத்தை எட்டியபோது நான் மிகவும் சக்திவாய்ந்தவளாக உணர்ந்தேன்’ என கூறி இருக்கிறார்.

தனது வெற்றியின் மூலம், வரலாற்றின் மிக இருண்ட காலத்தையும் தாண்டி அவர்கள் வருவார்கள் என்ற செய்தியைத் தனது நாட்டுப் பெண்களுக்குச் சொல்ல விரும்புவதாக ரிவர் அகமது கூறுகிறார்.

ரிவர் அகமது, இரண்டாவது தலிபான் ஆட்சியின்போது தப்பித்து, முதலில் இந்தியாவுக்கும், அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றிருக்கிறார்.
அவர் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தார். ஆனால் அங்கு விதிக்கப்பட்ட தடைகள், அவரை முன்னேற விடாமல் தடுத்தன.

பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தபோது அவரது சகோதரனின் திடீர் மரணம் அவருக்கு இரண்டாவது பேரதிர்ச்சியாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், நதிகள் தன்னை தொடர்ந்து முன்னேறத் தூண்டியதாகவும், அதனால் ஜகியா அகமது என்ற தனது பெயரை ரிவர் அகமது என மாற்றிக்கொண்டதாகவும் கூறுகிறார்.

தனது இந்த சாதனையின் மூலம், 2021-ம் ஆண்டு தலிபான் கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கல்விக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவர ரிவர் அகமது விரும்பியுள்ளார்.

தலிபான்களின் முதலாவது ஆட்சிக் காலத்தில்; பெண் கல்விக்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோது ரிவர் அகமது பிறந்தார்.
ஆனால் 2001-ல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். அது சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப வழிவகுத்ததுடன், பெண்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்தது.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில், இந்துகுஷ் மலைகளுக்கு தெற்கே அமைந்துள்ள கசினியில்தான் ரிவர் அகமது பிறந்து வளர்ந்தார்.
‘ஒவ்வொரு நாளும் எனது பள்ளி வகுப்பை அடைவதற்காக, பனி மூடிய மலையில் ஏறி இறங்கி நான்கு மணி நேரம் நான் நடப்பேன்’ என்கிறார் ரிவர் அகமது.

மேலும், 2014-ம் ஆண்டில், காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தான் பயில்வதற்குத் தனது குடும்பத்தினரை சம்மதிக்க வைத்ததாக அவர் கூறுகிறார்.

ஒருமுறை தலிபான்கள் ஒரு பேருந்தை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அந்தப் பேருந்தில் இருந்த ஒரே பெண் அவர்தான்.
பேருந்து எங்கும் ரத்தம் சிதற, தன் மீதும் சிறிது ரத்தத்தைப் பூசிக்கொண்டு, இறந்ததுபோல் கிடந்து தப்பித்ததாக ‘பகீர்’ தகவலை ரிவர் அகமது சொல்கிறார்.

அந்த சம்பவத்துக்குப் பின்னர் அவரது குடும்பம் காபூலுக்கு குடிபெயர்ந்தது. அங்கு இதழியல் பயின்ற ரிவர் அகமது, வானொலி நிருபராக பணியாற்றினார். பின்னர் 2019-ல் இந்தியா வந்தவர், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.
அங்கே, ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஒரு பார்லிசர் நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஆஸ்திரேலியா வந்த ஆறே மாதங்களில், அவருடன் இருந்த 20 வயது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். அதில் ரிவர் அகமது உடைந்துபோனார். அதிலிருந்து தனது கவனத்தை திசை திருப்பவும், ஆப்கானிய பெண்களின் நிலை குறித்து உலகத்தின் கவனத்தை ஈர்க்கவும் மலையேற்றத்தில் ஈடுபட ரிவர் அகமது முடிவு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு மலையேற்ற பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து முறைப்படி பயிற்சி பெற்ற ரிவர் அகமது, தற்போது தனது எவரெஸ்ட் கனவை நனவாக்கியும் விட்டார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK