உட்லண்ட்ஸில் அதிர்ச்சி சம்பவம்..!!பேருந்து ஓட்டுநரின் தவறால் விபத்து ஏற்படும் நிலை..!
சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் அவென்யூ 2 மற்றும் 5 சந்திப்பில் SMRT தடம் எண் 901 பேருந்து (வண்டி எண் :#SM1791D) தவறான திசையில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரே வந்த வாகனத்தின் மீது அந்த பேருந்து மோதவிருந்தது. இந்த நிகழ்வானது மற்ற சாலை பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்த காணொளி SGRV என்ற சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அந்த பேருந்து சந்திப்பில் திடீரென எதிர் திசைப் பாதையில் நுழைவது தெரிகிறது.
இந்த ஆபத்தான விதிமுறை மீறல் குறித்து SMRT கூறியதாவது, பயணிகள் மற்றும் பிற சாலை பயனாளர்களின் பாதுகாப்பிற்கு நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது; இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த விதிமீறலை நிறுவனம் தீவிரமாக கருத்தில் கொள்வதோடு, காவல்துறை மற்றும் விசாரணை முடிந்ததும் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
எதிரே வந்த காரில் இருந்த ஒரு குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் முறையான புகார் பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது போன்ற ஆபத்தான ஓட்டுதல் முறைகளை எதிர்கொண்டால் பொதுமக்கள் பின்வரும் வழிகளின் மூலம் SMRT வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.
தொலைபேசி எண்: 1800-336-8900 (24 மணி நேர சேவை)
தேவையான விவரங்கள்: பேருந்து எண், தடம் எண்(Bus Service Number), சம்பவம் நடந்த இடம்,தேதி, நேரம் மற்றும் வீடியோ அல்லது புகைப்பட ஆதாரம்