அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு...!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

சிங்கப்பூர்: அமைச்சர்கள் கே. சண்முகம் மற்றும் டான் சீ லெங் தொடர்ந்த அவதூறு வழக்கில், சர்வதேச நிதிச் செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ (Bloomberg) மற்றும் அதன் செய்தியாளர் லோ டே வே (Low De Wei) ஆகியோருக்கு மொத்தம் S$290,000 சட்டக் கட்டணமாக (Legal Costs) வழங்கிட சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னணி என்ன?
கடந்த 2024 டிசம்பரில், சிங்கப்பூரின் ஆடம்பர பங்களா (Good Class Bungalow – GCB) விற்பனைகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து புளூம்பெர்க் தளம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், அமைச்சர்கள் கே. சண்முகம் மற்றும் டான் சீ லெங் ஆகியோரின் சொத்துப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன.

அந்த கட்டுரையானது, அமைச்சர்கள் தங்களின் சொத்துப் பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையின்றி, ரகசியமாகவும் தணிக்கைகளில் இருந்து தப்பிக்கும் வகையிலும் மேற்கொண்டதாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறி அமைச்சர்கள் இருவரும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆட்ரி லிம் (Audrey Lim), புளூம்பெர்க் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும், அது அமைச்சர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அமைந்திருந்ததாகவும் தீர்ப்பளித்தார்.
முன்னதாக, இ வழக்கில் அமைச்சர்கள் இருவருக்கும் தலா S$230,000 நஷ்டஈடு வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டக் கட்டணம் குறித்த உத்தரவு
தற்போது ஜூலை 30 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, வழக்கிற்காக ஆன சட்டக் கட்டணமாக ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா S$145,000 வழங்கிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்-விசாரணைச் செலவு (Pre-trial costs): S$50,000
விசாரணைக் கட்டணம் (Trial costs): S$65,000 (6.5 நாட்கள் நடந்த விசாரணைக்கு)
பின்-விசாரணைச் செலவு (Post-trial costs): S$30,000

இதன் மூலம், நஷ்டஈடு மற்றும் சட்டக் கட்டணம் சேர்த்து, புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு அமைச்சருக்கும் மொத்தம் S$375,000 வழங்க வேண்டி உள்ளது.