ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆடம் சாலை மற்றும் ஆர்கேடியா சாலை சந்திப்பில் நேற்று (04.01.26) ஏற்பட்ட எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம், வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்கவில்லை என்று எரிசக்தி நிறுவனம் SP குழுமம் தெரிவித்துள்ளது.
முந்தைய தகவல்களின்படி, நேற்று மாலை 4.33 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடம் சாலையில் லோர்னி நெடுஞ்சாலை நோக்கிச் சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமைந்திருந்த எரிவாயு வால்வில் மோதியது. இதன் காரணமாக, பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன.
இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
SP குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கார் தரைமட்ட தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சாதனத்தில் மோதியதால், எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் அந்த சாதனம் சேதமடைந்திருந்தாலும், மாற்று குழாய் அமைப்பு மூலம் எரிவாயு விநியோகம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சேவையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் SP குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை விரைவாகக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.
அதே நேரத்தில், SP குழுமத்தின் அவசரகால பணியாளர்கள் உடனடியாக எரிவாயு விநியோகத்தை தனிமைப்படுத்தி, கசிவை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சேதமடைந்த எரிவாயு சாதனத்தின் பழுதுபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சேதத்தின் அளவு அதிகமாக இருப்பதால், பழுதுபார்ப்பு பணிகள் முழுமையடைய பல வாரங்கள் ஆகலாம் என்றும் SP குழுமம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எரிவாயு விநியோகம் தடையின்றி தொடர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.