பள்ளிக் கழிப்பறையில் மாணவர்கள் செய்த அட்டூழியம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆன்லைனில் பரவி வரும் ஒரு காணொளி கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கல்வி கிழக்கு வளாகத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி கழிப்பறையில் காகிதங்களை குவித்து தீ வைக்க முயன்ற சம்பவம் அதில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீ பரவுவதற்கு முன்பே மாணவர்கள் அதை அணைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பிப்ரவரி 27 அன்று “singaporeviral_sg2.0” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது.
காட்சியில், கழிப்பறை தரையில் குவிக்கப்பட்ட டாய்லெட் பேப்பருக்கு ஒரு சிறுவன் லைட்டர் கொண்டு தீ மூட்டுவது தெளிவாக தெரிகிறது. பின்னணியில் “நெருப்பை மூட்டுவோம்!” என்ற உற்சாகக் குரலும் கேட்கிறது.
தீப்பற்றியதும், இரு மாணவர்கள் மேலும் காகிதங்களை சேர்த்ததாகவும், பின்னர் தீ வேகமாக பரவத் தொடங்கியதும் வீடியோவில் காணப்படுகிறது. சுமார் 30 வினாடிகள் கழித்து அவர்கள் தீயை மிதித்து அணைத்தனர். தீ அணைந்தபோதும் சாம்பல் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. பின்னர் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோ 190,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான பகிர்வுகளையும், 300க்கும் மேற்பட்ட கருத்துக்களையும் பெற்றுள்ளது.சம்பவம் நடந்த நேரம் தெளிவாக குறிப்பிடப்படாதபோதிலும், மாணவர்கள் அணிந்திருந்த சீருடை மூலம் இது ITE கிழக்கு வளாகத்தில் நடந்திருக்கலாம் என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர்.
நெட்டிசன்கள் மாணவர்களின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடத்தையை கடுமையாக விமர்சித்தனர். தொழில்நுட்பக் கல்வி கிழக்கு வளாகத்தின் முதல்வர் வு ஜியான்சிங், இந்த சம்பவம் வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் நடந்ததை உறுதிப்படுத்தினார். சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளி அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.